என் தமிழ்

பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை : மே 27-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

சென்னை, 23 மே 2026 : தமிழக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை, தமிழக முதலமைச்சர் விஜய் வரும் மே 27-ஆம் தேதி சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

இந்த பிரம்மாண்ட தொடக்க விழா, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிரடிப்படை, முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பிரிவின் முதல் பெண் ஐ.ஜி. அதிகாரியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் இதில் இடம்பெற உள்ளனர்.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை இந்த படை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அதிரடிப்படைக்காக 30 ரோந்து வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

Scroll to Top