கோலாலம்பூர், 22 மே 2026 : கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மூன்று மாணவர் குழுக்கள், மே 18 முதல் மே 20 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர் கண்காட்சியில் சிறப்பான சாதனைகளைப் புரிந்து, பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
உலகளாவிய அளவில் நடைபெற்ற இந்த சர்வதேச கண்டுபிடிப்பு போட்டியில், மாணவர்கள் தங்களின் புத்தாக்கச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் கொண்டிருந்த திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு உயரிய விருதுகளை வென்றனர்.
“குளூகோகார்ட்” குழு தங்கப் பதக்கத்தையும், தொடக்கப்பள்ளி நிலைக்கான சிறந்த கண்டுபிடிப்பு விருதான “சாம்பியன் கிண்ணத்தையும்” வென்றதுடன், திவான் அல் நஹ்தா அமைப்பின் சிறப்பு விருதையும் பெற்றது.
இந்தக் குழுவில் ஆதீஷா மூர்த்தி, சிரஞ்சிவினி அகதீஸ்வரன், ஈஷா விஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
“டெர்ராஹோலி ஈகோஹேவன்” குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இதில் யேஷ்வேன் வேலேஸ்வரன், கோஎஷா குமரன், தினேந்திரன் மற்றும் அம்ஷாவருணி கணேசன் ஆகியோர் இடம்பெற்றனர்.
அதேவேளை, “யங் சயண்டிஸ்ட்” குழுவும் தங்கப் பதக்கத்தை வென்று பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்தக் குழுவில் சான்வி உவராஜ், நுவன் நகுலன், நவ்யா நகுலன், ரிஷ்வா கேசவன் நாயர், ரியாங்க்கா கேசவன் நாயர் மற்றும் லக்ஷ்மன் வண்ணு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மாணவர்களின் இந்த மகத்தான சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் கண்டுபிடிப்பு திறன்கள் எதிர்கால இளம் விஞ்ஞானிகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










