கோலாலம்பூர், 20 மே 2026 : இந்துச் சமயத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள் மற்றும் செயல்களுக்கு எதிராக மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சமீபகாலமாக சமூக ஊடகங்களில் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை இழிவுபடுத்தும் பதிவுகள் அதிகரித்து வருவதாகக் கவலை வெளியிடப்பட்டது.
இத்தகைய செயல்கள், நாட்டின் பல இன மற்றும் பல மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தன்மை கொண்டவை என்றும், மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலும் பொறுப்பற்றதாக கருதப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியது.மேலும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எந்த மதத்தையும் அவமதிக்கக் கூடாது என்றும், சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை அனைவரும் பேணிக் காக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டது.
அதேவேளை, இந்து சமயத்தின் மரியாதையையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






