கோலாலம்பூர், 17 மே 2026 : 1MDB ஊழல் விவகாரத்தில் முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ அமெரிக்காவில் ஜனாதிபதி மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மலேசியா அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தேசியத் தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “ஜோ லோவின் மன்னிப்பு கோரிக்கை அமெரிக்காவின் உள்நாட்டு தீர்மானமாக இருந்தாலும், 1MDB ஊழலில் தொடர்புடைய அனைவரும் எந்த விதிவிலக்கும் இன்றி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற மலேசியாவின் நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
1MDB ஊழல் மலேசியாவுக்கு தலைமுறைகளைத் தாண்டிய பொருளாதார மற்றும் நற்பெயர் இழப்புகளை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். “இது நாட்டின் செல்வத்தையும், மக்களின் நம்பிக்கையையும் சீரழித்த தேசிய அளவிலான பகற்கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே 2018ஆம் ஆண்டு மக்கள் ஒன்று திரண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர்,” என்றார்.
மேலும், 1MDB தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஏற்கனவே இந்த விவகாரத்தின் தீவிரத்தை வலியுறுத்தியுள்ளதாகவும், நீதிபதி கொலின் செக்குவேரா தனது தீர்ப்பில் ஜோ லோவை இந்த முழு சதித்திட்டத்தின் “மூளையாக” குறிப்பிட்டதாகவும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். அப்போதைய பிரதமருடன் ஜோ லோவுக்கு “சந்தேகத்திற்கு இடமில்லாத தொடர்பு இருந்தது” என நீதிமன்ற ஆதாரங்கள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் பல நாடுகளை உள்ளடக்கிய நிதி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையதால், உலகளாவிய விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்காவில் நடைபெறும் நடவடிக்கைகளும் இந்த ஊழல் வழக்கின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உலகளாவிய சதித்திட்டத்திற்கு காரணமானவர்கள் எங்கு இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஜோ லோ மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இங்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.





