பெய்ஜிங், 16 மே 2026 : சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத விவகாரத்தில் உடன்பாட்டை எட்டவில்லை என்றால், ஈரான் “அழிவை சந்திக்க நேரிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீன பயணத்தின் இறுதிநாளில் Fox News-க்கு அளித்த பேட்டியில், “ஈரான் தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்; இல்லையெனில் முழுமையாக அழிக்கப்படுவார்கள்” என்று டிரம்ப் கூறினார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என்பதில் தாமும் ஷி ஜின்பிங்கும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஹோர்முஸ் ஜலசந்தி திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதிலும் இரு தலைவர்களும் ஒத்த கருத்தைப் பகிர்ந்துகொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணு திட்டம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன.





