பினாங்கு, 16 மே 2026 : சமூக சேவையில் ஆற்றிய பங்களிப்பிற்காக ஜனார்த்தனன் வெள்ளியத்தும், பினாங்கின் ஒன்பதாவது யாங் டி-பெர்டுவா நெகெரி (TYT) துன் டத்தோ செரி உத்தாமா ஹாஜி ராம்லி ங்கா தாலிப் அவர்களிடமிருந்து Pingat Jasa Masyarakat (PJM) எனும் சமூக சேவை விருதைப் பெற்றார்.
இந்த விருதைப் பெற்றதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த அங்கீகாரம் தனக்கே உரியது அல்ல என்றும், தனது சமூக சேவைப் பயணத்தில் துணைநின்ற பலரின் பிரார்த்தனைகள், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பின் விளைவாக இதை கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், MIYC நேஷனல் அமைப்பின் விரிவான குடும்பத்தினருக்கும், குறிப்பாக அதன் தலைவர் சத்ர தனேஷ் பாசில் வழங்கிய நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்திற்கும் அவர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அதேவேளை, MIYC பினாங்கில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய தோழர்களுக்கும், குறிப்பாக தனது அனைத்து முயற்சிகளிலும் உறுதுணையாக இருந்த சத்ர நித்தியராஜாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தனது குடும்பத்தினரின் தியாகங்களும் அசைக்க முடியாத ஆதரவும் தனது சமூக சேவைப் பயணத்தின் வலிமை என குறிப்பிட்ட அவர், சமூக சேவையின் பாதையில் தன்னை முதன்முதலில் வழிநடத்திய தனது தந்தை வெள்ளியத்தும் முனுசாமிக்கு சிறப்பு நன்றியையும் தெரிவித்தார்.
மனிதநேய விழுமியங்கள், நேர்மை மற்றும் சமூகத்திற்கு உதவும் பண்புகள் ஆகியவை தந்தையிடமிருந்து பெற்ற மிகப்பெரிய வாழ்க்கைப் பாடங்கள் என அவர் கூறினார்.
மேலும், சமூக சேவையில் தொடர்ந்து ஊக்கமளித்த டத்தோ டாக்டர் லோகா பாலா மோகனுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார். இந்த கௌரவம், மக்களுக்கும் சமூகத்திற்கும் மேலும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கான ஊக்கமாக அமையும் என்றும் ஜனார்த்தனன் வெள்ளியத்தும் தெரிவித்துள்ளார்.






