கோலாலம்பூர், 15 மே 2026 : மக்களின் பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2026ஆம் ஆண்டிற்குள் RM5 பில்லியனுக்கும் அதிகமான சிறுநிதி வசதிகளை வழங்க மதானி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் நாடு முழுவதும் 400,000-க்கும் மேற்பட்ட சிறு தொழில்முனைவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. RM100,000 வரை வழங்கப்படும் இந்த நிதியுதவி, பல்வேறு வளர்ச்சி நிதி நிறுவனங்கள் மற்றும் முகமைகள் வழியாக வழங்கப்படவுள்ளது.
அமானா இக்தியார் மலேசியா (AIM), டெக்குன் நேஷனல், பேங்க் சிம்பனன் நேஷனல் (BSN), மஜ்லிஸ் அமானா ரக்யாட் (MARA), அக்ரோபேங்க் மற்றும் பேங்க் கெர்ஜசாமா ரக்யாட் மலேசியா ஆகியவை இந்த நிதி உதவி திட்டத்தில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்களாகும்.
சில திட்டங்களில் ஆண்டுக்கு 3 விழுக்காடு என்ற குறைந்த வட்டி விகிதத்துடன் வழங்கப்படும் இந்த வசதி, சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், பெண்கள், இளைஞர்கள், பகுதிநேரப் பணியாளர்கள், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) பட்டதாரிகள், விவசாயிகள் மற்றும் அஸ்னாஃப் குழுவினருக்கு பெரும் ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி மூலம் தொழில்முனைவோர் தங்களின் வணிகங்களை விரிவுபடுத்தவும், வருமானத்தை உயர்த்தவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள் என அரசாங்கம் நம்புகிறது.
மதானி பொருளாதாரக் கொள்கையின் இலக்குகளுக்கு ஏற்ப, விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்தவும், நிதியுதவி நிபந்தனைகளை மக்களுக்கு சாதகமாக மாற்றவும், உதவிகளை விரைவாகவும் நியாயமாகவும் வழங்கவும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







