13 மே 2026 : பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (KPWKM) புதிய முன்முயற்சியான ‘பிரிஸ்மானிதா’ (PRISMAnita), குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆரம்பகட்ட உதவி, தகவல், பரிந்துரை மற்றும் ஒருங்கிணைந்த ஆதரவு வழங்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மேம்பாட்டுத் துறை (JPW) ஏற்பாடு செய்த பெண்களுக்கான நல்வாழ்வு வழிகாட்டுதல் திட்டம் (AKU WANITA@KRT) ஜார்ஜ்டவுனில் உள்ள பெர்ஜயா ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சர் Lim Hui Ying லிம் ஹுய் யிங் நிறைவு செய்து வைத்தார்.
பினாங்கு காதுகேளாதோர் சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 314 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குடும்ப வன்முறை பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்கவும் இந்த நிகழ்ச்சி முக்கிய தளமாக அமைந்தது.
குடும்ப வன்முறை என்பது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு குற்றச்செயலும் மனித உரிமை மீறலுமாகும் என்று லிம் ஹுய் யிங் வலியுறுத்தினார். சமீபத்தில் ஊடகங்களில் வெளியான பல சம்பவங்கள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்றும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மதானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடையாளமாக PRISMAnita திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், பெண்களுக்கு எளிதில் அணுகக்கூடிய உதவி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை, மொத்தம் 34 பெண்கள் PRISMAnita@PPWN மூலம் சேவைகளைப் பெற்றுள்ளதாகவும், இது திட்டத்தின் தேவையையும் அதன் செயல்திறனையும் பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டது.
குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்து, பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்பதற்காக KPWKM தொடர்ந்து சட்டங்கள், கொள்கைகள் மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.








