கோலாலம்பூர், 08 மே 2026 : ராயல்கோகுலராஜன் ராஜேந்திரனின் முழுநீள இசை ஆவணப்படமான ‘ஆராரோ ஆரிரரோ’ திரைப்படத்தை மையமாகக் கொண்ட கலைக் கண்காட்சி, வரும் மே 10ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள கலை குரல் தொகுப்பகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சி, காலனித்துவ மலாயாவில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் மூதாதையர் நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக அனுபவித்த அந்நியப்படுத்தப்பட்ட வாழ்க்கை, நினைவுகள் மற்றும் அடையாளப் போராட்டங்களை கலை வடிவில் வெளிப்படுத்துகிறது.
இசை மற்றும் காட்சிக்கலை இணையும் இந்த நிகழ்வில், மலேசியக் கலைஞர்களான ஸ்டீபன் மேனன், கே. எஃப். சாய், சங்கர் கணேஷ், ஃபுளோரா, ஜெரால்ட் மோகன், ஷாரினி யோகி, ஜெகன் ரகுநாதன், தினேஷ் புஷ்பரணி, தனசெல்வம், சினி, சுஹான், சிவானந்தன் கே. மற்றும் ரீனா கோச்சர் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இடம்பெறுகின்றன.
இந்த படைப்புகள், தோட்ட வாழ்க்கையின் பாரம்பரியம், நினைவுகள், மன உளைச்சல்கள், அடையாளத் தேடல் மற்றும் மகிழ்ச்சி போன்ற அம்சங்களை சமகால கலை வடிவில் பிரதிபலிக்கின்றன.
இந்த நிகழ்வை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ராஜேந்திரன் பெருமாள் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தக் கலைக் கண்காட்சி, மே 10ஆம் தேதி மாலை 7 மணிக்கு செந்தூலிலுள்ள கலை குரல் தொகுப்பகத்தில் நடைபெறுகிறது.
📍 கலை குரல் தொகுப்பகம், ஜாலான் கோவில் ஹிலிர், செந்தூல், கோலாலம்பூர்.






