என் தமிழ்

கடற்படை கப்பல் திட்டத்தில் புதிய சிக்கல் – மலேசியா விளக்கம் கோரல்

புத்ராஜெயா,08 மே 2026 :  ராயல் மலேசிய கடற்படையின் லிட்டோரல் காம்பாட் ஷிப் கப்பல்களுக்கான கடற்படை தாக்குதல் ஏவுகணை விநியோக விவகாரம் தொடர்பாக, மலேசியா நோர்வே அரசுடன் தூதரக வழியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் முகமட் காலிட் நோர்டின் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், நோர்வே நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் ஒன்றுடன் ஏற்கனவே கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு ஏற்றுமதி அனுமதி தொடர்பாக நோர்வே அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம், இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, மேலதிக விளக்கங்களைப் பெறுவதற்கும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சிறந்த தீர்வை காண்பதற்கும் மலேசியா தூதரக வழிகளை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் மூலோபாய தேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மலேசியா – நோர்வே இடையேயான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து நல்ல நிலையில் பேணப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்டு கவனமாக மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top