புத்ரஜெயா, 28 ஏப்ரல் 2026 : இந்திய சமூக ஆலயங்களை சமூக மேம்பாட்டு மையங்களாக வலுப்படுத்தும் நோக்கில் தர்ம மதானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 462 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 92 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக பிரிக்பீல்ட்ஸ் கலாமண்டபத்தில் நடைபெற்ற இந்து ஆலயத் தலைவர்கள் சந்திப்பில் 300 ஆலயங்களுக்கு 60 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 462 வழிபாட்டு மையங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,000 இந்து ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் வீதம் 2 கோடி ரிங்கிட் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.
மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன், ஆலயங்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல், சமூக மேம்பாடு, கல்வி, இளைஞர் முன்னேற்றம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான மையங்களாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிதி சமூகத்திற்கு நேரடி பயன் அளிக்கும் கல்வி, ஆன்மிக மற்றும் இளைஞர் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர், இந்த உதவி இந்திய சமூகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கான முதலீடாக அமையும் என குறிப்பிட்டார்.
இந்த முயற்சி இந்திய சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தி, மேலும் உள்ளடக்கிய மற்றும் முன்னேற்றமான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என நம்பப்படுகிறது.









