என் தமிழ்

‘Winds of Glory’ இசை நிகழ்ச்சி இளைஞர் திறமையின் உலகளாவிய வெளிப்பாடு – பிரதமர்

கோலாலம்பூர், 26 ஏப்ரல் 2026 : செரி புத்ரி சிம்போனிக் விண்ட்ஸ் இசைக்குழு மற்றும் பாடகர் அமீர் மஸ்டி இணைந்து நடத்திய விண்ட்ஸ் ஆஃப் குளோரி இசை நிகழ்ச்சி, தரமான கல்வி இளைஞர்களை உலக அரங்கில் போட்டியிடக்கூடிய தலைமுறையாக உருவாக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், செரி புத்ரி சிம்போனிக் விண்ட்ஸ் இசைக்குழு சர்வதேச அளவில், குறிப்பாக வியன்னாவில் தங்க விருது பெற்றிருப்பது, நாட்டின் கல்விச் சூழல் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்கும் வலிமையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் உருவாகும் கல்வி அமைப்பு திறமையை மட்டுமின்றி சிறந்த பண்பையும் கட்டியெழுப்புகிறது என்றும் அவர் கூறினார். அதேவேளை, தொழில்முறை கலைஞர்களுடன் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகள், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை வளப்படுத்துவதோடு, அவர்களின் சிந்தனைப் பரப்பையும் தன்னம்பிக்கையையும் விரிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உலக இசைப் போட்டி 2026 போன்ற சர்வதேச மேடைகளில் மாணவர்கள் பங்கேற்கும் கனவை நனவாக்க அரசும், தனியார் துறையும், சமூகமும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இத்தகைய முயற்சிகள் இசையைத் தாண்டி, தைரியமிக்க, பண்பாட்டுணர்வு மிக்க, உலகளவில் போட்டியிடும் தலைமுறையை உருவாக்கும் முயற்சியாக அமைகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top