கோலாலம்பூர், 25 ஏப்ரல் 2026 : மலேசியா சர்வதேச கர்நாடக இசை விழா 2026 இன்று மலேசிய சுற்றுலா மையம் (MaTiC) வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது. சுகம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்த இரு நாள் இசை விழா, இன்றும் நாளையும் (ஏப்ரல் 26) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தொடர்கிறது.
Visit Malaysia 2026 முன்னெடுப்புடன் இணைந்து நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா இன்று உற்சாகமான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. கர்நாடக இசை, பாரம்பரிய நடனம், கருத்தரங்கங்கள் மற்றும் இசைக் கச்சேரிகள் மூலம் கலை ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முதல் நாளில் தொடக்க விழாவைத் தொடர்ந்து மன்ற உரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிகழ்வின் இரண்டாவது நாளான நாளை, இளம் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சிறப்பு இசை மேடைகள் மற்றும் சர்வதேச கர்நாடக இசைக் கச்சேரி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நடைபெறவுள்ளன. குறிப்பாக சர்வதேச கலைஞர்களின் பங்கேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக இசையை உலகளவில் பரப்புவதோடு, மலேசியாவை சர்வதேச கலை மற்றும் பண்பாட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கத்துடன் இந்த விழா நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கலை ஆர்வலர்கள் பங்கேற்றுள்ள இந்த விழா, மலேசியாவின் பன்முக பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது.









