குவாலா பிலா, 25 ஏப்ரல் 2026 : நெகிரி செம்பிலானில் தேசிய எண்ணிம வலையமைப்பு (ஜெண்டேலா) திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு வலையமைப்பை 4ஜி-யிலிருந்து 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல் கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். மக்கள் மேலும் நிலையான, தரமான மற்றும் விரிவான இணைய அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் தொடர்ச்சியே இந்த நடவடிக்கை என நெகிரி செம்பிலான் பாரம்பரியம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் செயற்குழு உறுப்பினர் டத்தோ முகமது ஃபைசல் ராம்லி தெரிவித்தார்.
“தற்போது எங்களிடம் 19 கோபுரங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை 4ஜி கோபுரங்கள் மற்றும் 5ஜி-க்கு மேம்படுத்தப்படத் தயாராக உள்ளன. இந்தச் செயலாக்கம் 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு இடையில் கட்டங்களாக மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாம் மேம்பட்ட இணைய வேகத்தை அனுபவிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
இங்குள்ள ஜுவாசே, தமன் ரெடானியில் ஜெண்டேலா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தகவல் தொடர்பு உள்கட்டமைப்புத் தளத்திற்கு அவர் வருகை தந்தபோது சந்திக்கப்பட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த டத்தோ முகமது ஃபைசல் ராம்லி, கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று செயல்படத் தொடங்கிய தமன் ரெடானியில் உள்ள ஜெண்டேலா திட்டம், தற்போது சுமார் 2,000 உள்ளூர்வாசிகளுக்குப் பயனளித்து வருவதாகக் கூறினார். பிப்ரவரி 28 நிலவரப்படி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் மூலம் கோலா பிலாவில் இணையதளப் பயன்பாடு 99 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.





