மலாக்கா, 24 ஏப்ரல் 2026 : மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான “இலக்கவியல் தலைமைத்துவம் மற்றும் மதானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கம் 2026” மலாக்காவில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. பார்க்ராயல் ஏ’ஃபமோசா ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான கருத்தரங்கு, தமிழ்ப்பள்ளிகளில் இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வை கல்வித் துணை அமைச்சர் Wong Kah Woh அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் சிறப்பு கருத்தரங்கை இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo தொடக்கி வைத்து உரையாற்றினார்.
2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற நாடாக மாற்றும் தேசிய இலக்கை நோக்கி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். கடந்த ஆண்டு மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலக்கவியல் பொருளாதாரம் 25.5 சதவீத பங்களிப்பு செய்துள்ளதையும், 2030க்குள் அதை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்வித்துறையில் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்க்க அமைச்சு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என உறுதியளித்தார். மாநில அளவில் இலக்கவியல் நிர்வாக தலைமைத்துவப் பயிற்சிகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
470 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவனத் தலைவர் மற்றும் Asia School of Business செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் டாக்டர் டாவிட் ஆசிர்வாதம் சிறப்புரை ஆற்றினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் தொடர்பான அணுகுமுறைகள், பள்ளிக் கல்வியில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கின் இரண்டாவது அங்கமாக Malaysian Tamil Language Archive ஏற்பாட்டில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் மகிழ்தமிழ் அசைவூட்டக் குறுங்காணொலி தொகுப்பும், ஆண்டு 1 முதல் 6 வரை அறிவியல் பாடத்திற்கான தமிழ்–மலாய்–ஆங்கில கலைச்சொல் தொகுப்பும் வெளியிடப்பட்டன. இந்த வெளியீடுகளை கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்.
41 குறுங்காணொலிகள் வழியாக தமிழ் எழுத்துக்களை மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் மகிழ்தமிழ் முயற்சியும், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கான மும்மொழிக் கலைச்சொல் தொகுப்பும் தமிழ்ப்பள்ளி கல்வி வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் எனப் பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள், இத்தகைய இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சிகள் தங்களது நிர்வாக மற்றும் கற்பித்தல் திறனை வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டு, இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.








