தெஹ்ரான், 13 ஏப்ரல் 2026 : அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களால் இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர் அபாஸ் மஸ்ஜெதி அரானி தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் தொடக்கம் வரை நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அறிவியல் முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த எண்ணிக்கையில் 2,875 ஆண்களும், சுமார் 500 பெண்களும் அடங்குவதாகவும், சில வெளிநாட்டவர்களும் உயிரிழந்தவர்களில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்களின் தீவிரத்தால் பல பகுதிகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க முடியாத சூழ்நிலை இருந்தாலும், மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் முக்கிய அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் தொடரும் இந்த மோதல், மனித உயிரிழப்புகளையும், பிராந்திய பாதுகாப்பையும் கடுமையாக பாதித்து வருவதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.





