என் தமிழ்

“இன்றிரவே பேரழிவு” எச்சரிக்கை: ஈரானை கடுமையாக எச்சரித்த டிரம்ப்

நியூயார்க், 07 ஏப்ரல் 2026 : ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. சுமார் 6 வாரங்களாக நீடித்து வரும் இந்த தாக்குதல்களில், ஈரானில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

மேற்கு ஆசியப் பகுதியில் அதிகரித்துள்ள இந்த மோதல், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை நேரடியாக பாதித்ததுடன், வளைகுடா நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் கருத்தை ஈரான் மறுத்துள்ளது. மேலும், ஈரானின் அணு உலைகளை தாக்கும் சாத்தியம் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்கா காலக்கெடுவை விதித்துள்ளது. அந்த காலக்கெடு இன்றிரவு 8 மணி வரை நீடிக்கும் என டிரம்ப் கூறியுள்ளார்.

அந்த காலக்கெடுவுக்குள் ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் கடுமையான தாக்குதல் நடைபெறும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியிட்ட செய்தியில், “இன்றிரவு ஒரு முழு நாகரீகம் அழியும் அபாயம் உள்ளது; அது மீண்டும் திரும்ப முடியாததாக இருக்கும்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலக வரலாற்றில் இன்றைய இரவு மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், பல தசாப்தங்களாக நீடித்து வந்த பதற்ற நிலைக்கு முடிவு கட்டும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top