வாஷிங்டன், 01 ஏப்ரல் 2026 : பூமியின் ஒரே இயற்கை துணைக்கோளான நிலவை ஆராய்வதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நிலா ஆய்வில் கடுமையான போட்டியில் ஈடுபட்டு, பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பியிருந்தன. பின்னர் அந்த ஆய்வுகள் மந்தமடைந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு பின் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா தயாராகியுள்ளது.
இதற்காக NASA ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஆர்டெமிஸ்-2’ பயணத்தில், 3 அமெரிக்க விண்வெளி வீரர்களும், 1 கனடா வீரரும் கலந்து கொண்டு 53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை நோக்கி பயணிக்க உள்ளனர்.
இந்த பயணத்தில், ‘ஓரியன்’ விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தில், வீரர்கள் நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். இது மனிதர்கள் இதுவரை சென்றிராத ஆழமான விண்வெளிப் பகுதியை அடையும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
நிலவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்துவதோடு, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு SpaceX மற்றும் Blue Origin போன்ற தனியார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.
கடைசியாக 1972ஆம் ஆண்டு ‘அப்பல்லோ 17’ பயணத்திற்குப் பிறகு மனிதர்கள் நிலவில் கால் பதிக்கவில்லை. தற்போது சுமார் 93 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டிற்குள் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்குவதே நாசாவின் இலக்காகும்.
இதற்கிடையில், சீனாவும் 2030க்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் உலகளாவிய போட்டி அதிகரித்துள்ளது. வானிலை சாதகமாக இருந்தால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





