பொகோட்டா, 24 மார்ச் 2026 : கொலம்பியாவில் 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சி-130 ஹெர்குலஸ் வகை விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், முதற்கட்ட தகவலின்படி சுமார் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பல ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதுடன், ஏராளமானோர் கடுமையாக காயமடைந்துள்ளனர். கொலம்பியா விமானப்படை வரலாற்றில் சமீபகாலத்தில் நடந்த மிகப்பெரிய விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஈக்வடார் மற்றும் பெரு எல்லைக்கு அருகிலுள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோ பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. விமானத்தின் சிதைவுகள் அடர்ந்த காடு பகுதியில் பரவி கிடக்கின்றன. விபத்துக்கான காரணங்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்த விபத்து நகர மையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் நடந்ததாகவும், விமானத்தில் 110 ராணுவ வீரர்களும் 10 விமான பணியாளர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பற்றி எரிந்ததால், கரும்புகை எழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.





