தெஹ்ரான், 21 மார்ச் 2026 : ஈரானை வான்வழியாக தாக்கி வரும் அமெரிக்கா, தரை வழி தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தரை வழி தாக்குதல் குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, ஈரான் ராணுவ வட்டாரம் தஸ்னிம் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “எங்கள்மீது தரை வழி தாக்குதல் நடத்துவது எங்கள் சிவப்பு கோட்டாகும். எதிரிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் எதிர்பாராத பதில்களை வழங்கி வருகிறோம்; இதிலும் அதையே காண்பிப்போம்” என்று கூறியுள்ளது.
மேலும், “எங்கள் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கினால், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து எரிசக்தி அமைப்புகளும் பாதிக்கப்படும். இந்த முறை முழுமையாக தயாராக உள்ளோம். டிரம்ப் ஏதேனும் தவறு செய்தால், அவருக்கு எதிர்பாராத பதிலை வழங்குவோம்” என்றும் தெரிவித்துள்ளது.
“எங்கள் நிலத்தில் இருந்து அமெரிக்க படையினரின் சவப்பெட்டிகளைக் கூட அவர்கள் எடுத்துச் செல்ல முடியாது” என்று ஈரான் ராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை வான்வழியாக தாக்கியது. அதன்பின் நடந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன; இதை ஈரானும் உறுதி செய்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. பதிலடியாக, ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளில் உள்ள அவற்றின் ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.





