மாட்ரிட், 20 மார்ச் 2026 : ஐரோப்பிய முன்னணி கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கால்இறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் 16) ஆட்டத்தில், ஸ்பெயின் நாட்டின் வலுவான அணியான பார்சிலோனா, இங்கிலாந்தின் நியூகேஸ்டில் அணியை எதிர்கொண்டது.
இந்த முக்கியமான போட்டியில், முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் சமநிலையுடன் மோதின. இரு தரப்பும் கோல் அடிக்க பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், பாதுகாப்பு ஆட்டம் வலுவாக இருந்ததால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணி தங்களது உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாக்குதலில் தீவிரம் காட்டிய அவர்கள் தொடர்ந்து கோல்கள் அடித்து எதிரணியை அதிர்ச்சியடையச் செய்தனர். நியூகேஸ்டில் அணி தடுமாறிய நிலையில், பார்சிலோனா கோல் மழை பொழிந்து 7-2 என்ற பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சுற்றின் முதல் லெக் ஆட்டம் 1-1 என சமநிலையுடன் முடிந்திருந்தது. இதனால், இரு ஆட்டங்களின் மொத்த கணக்கில் 8-3 என்ற கணக்கில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றி மூலம், சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை நோக்கி பார்சிலோனா தனது பயணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.




