ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜீலம் நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் கடந்த இரண்டு நாட்களாக தெற்கு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் மூழ்கியுள்ளன. சோபியான் மாவட்டத்தில் உள்ள ராம்பியாரா நதியிலும் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெள்ள பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 6 குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். மேலும் இரண்டு குழுக்கள் காஷ்மீர் புறப்படத் தயாராக உள்ளனர்.
மாநில அரசு கேட்டுக்கொண்டதையடுத்து 80க்கும் மேற்பட்ட மீட்பு வீரர்கள் கொண்ட இந்த இரண்டு மீட்புக்குழுவினரும் படகுகளுடன் பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா முகாமில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதில் ஒரு குழு ஜம்மு மாவட்டம் கார்கல் பகுதியிலும், மற்றொரு குழு ரஜோரி மாவட்டம் சுந்தர்பனியிலும் மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
திருமண கோஷ்டியினர் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுந்தர்பனியில் இந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.