என் தமிழ்

காசா பகுதியில் இஸ்ரேல் விமான தாக்குதல்: 2 பேர் பலி

காசா, 18 மார்ச் 2026 : ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்களை கொன்று பலரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றதற்கு பதிலடியாக, காசா பகுதியில் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் இன்று மேற்கொண்ட வான்தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, காசாவின் தெற்கில் உள்ள கான் யூனிஸ் நகரத்திலிருந்து மேற்கே முவாசி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் அருகே சென்ற வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கான் யூனிஸ் நகரில் பாலஸ்தீனிய செம்பிறை சங்கம் நடத்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

இதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் கர்ப்பிணி பெண் ஒருவர், இரண்டு சிறுவர்கள் மற்றும் 9 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top