சென்னை, 18 மார்ச் 2026 : 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளின் வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியும் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி தனது ஜெர்சி எண்ணை மாற்றி இந்த ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தோனி என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது ஜெர்சி எண் 7 தான்.
ஆனால் இனி அவர் 7-க்கு பதிலாக 8 என்ற ஜெர்சி எண்ணுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில எண்கள் நம்முடன் எப்போதும் இணைந்தே இருக்கும். எனக்கு 7 அப்படிப்பட்ட ஒன்றாகும். ஆனால் இன்று நான் 8-க்கு மாறுகிறேன். அதற்கான காரணம் விரைவில் உங்களுக்கு தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.




