ஷா ஆலம,17 மார்ச் 2026 : ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செய்திகள், சிலாங்கூரில் உள்ள பல நகராட்சிப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் (PBT) 20 எல்.இ.டி திரைகளில் வெளியிடப்பட உள்ளது.
சிலாங்கூர் மாநில சாலை பாதுகாப்பு கவுன்சிலின் (MKJR) துணைத் தலைவர் டத்துக் மொஹ்ட் யாசித் சாயிரி கூறுகையில், சாலை பாதுகாப்பு குறித்த இந்த செய்திகளை சாலைப் போக்குவரத்து துறை (JPJ) வழங்கியுள்ளது. அவை பெட்டாலிங் ஜெயா, செலாயாங், அம்பாங் ஜெயா, குவாலா சிலாங்கூர், செபாங் மற்றும் குவாலா லாங்காட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எல்.இ.டி திரைகளில் காலக்கட்டங்களுக்கு ஏற்ப ஒளிபரப்பப்படும் என தெரிவித்தார்.
பண்டிகை காலத்தில் போக்குவரத்து அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த நினைவூட்டல்களை விரிவாக எடுத்துச் செல்லும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
“சிலாங்கூரில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிடம் பொதுமக்களுக்கு தகவல் மற்றும் விளம்பரங்களை வெளியிட எல்.இ.டி திரைகள் உள்ளன. அதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தத்தமது நகர்ப்புற பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
“JPJ வழங்கிய இந்த பாதுகாப்பு செய்திகள் பண்டிகை காலம் முழுவதும், உள்ளூராட்சி மன்றங்கள் நிர்ணயித்த அட்டவணைப்படி மாறிமாறி ஒளிபரப்பப்படும்,” என்றார்.
2026 ஆம் ஆண்டு ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில், செக்ஷன் 17 பேருந்து நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.




