என் தமிழ்

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி,14 மார்ச் 2026 :  அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக வெளியாகிய தகவல்கள் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகபட்ச பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தது. பின்னர் அந்த கடுமையான வரிகளை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரி விதிப்பை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு 150 நாட்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. மேலும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரஷியாவிடமிருந்து ஒரு மாதத்திற்கு மட்டும் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஊடகச் செய்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும், பரஸ்பர நன்மை தரும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் இரு தரப்பும் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சமீபத்தில் புதிய வர்த்தக விசாரணை சுற்றை தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Scroll to Top