என் தமிழ்

கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு

14 மார்ச் 2026 : இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டுக்காக பிரபல தமிழ் கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஞானபீட விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தமிழில் இதற்கு முன்பு எழுத்தாளர் அகிலனின் ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் இலக்கியத்திற்கான அவருடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உயரிய விருது, பல தகுதி வாய்ந்த தமிழ் எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் இதுவரை இரண்டு தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 24 ஆண்டுகளாக எந்த தமிழ் எழுத்தாளருக்கும் இந்த விருது வழங்கப்படாத நிலையில், தற்போது வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய உலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வைரமுத்து இதற்கு முன்பு பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி, பாவேந்தர் விருது, பாரதி இலக்கியப் பரிசு உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இந்திய திரைப்படத்துறையில் பாடலாசிரியராக 7 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top