திருச்சி, 11 மார்ச் 2026 : திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலை மற்றும் ரெயில்வே உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய முக்கிய திட்டங்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
திட்டங்கள் விவரம்:-
- நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- சென்னை மணலியில் ஆண்டுக்கு 6.72 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலவை ஆலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுமார் ரூ.1,490 கோடி முதலீட்டில் உருவான இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும்.
- பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கிலோமீட்டர் நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் திறந்து வைத்தார்.
- தேசிய நெடுஞ்சாலை எண் 81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமைக்கப்பட உள்ள பசுமை புறவழிச்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- மேலும் நாகர்கோவில்–சார்லபள்ளி மற்றும் போத்தனூர்–தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரெயில்கள், ராமேசுவரம்–மங்களூரு சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலி–மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மயிலாடுதுறை–திருவாரூர்–காரைக்குடி பயணிகள் ரெயில் சேவைகள் உள்ளிட்ட ஐந்து புதிய ரெயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திட்டங்களின் பயன்கள்:-
இந்த திட்டங்கள் மூலம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் மக்களுக்கு பி.என்.ஜி. மற்றும் சி.என்.ஜி. மூலம் பாதுகாப்பான சமையல் மற்றும் போக்குவரத்து வசதிகள் கிடைக்கும்.
மேலும் கார்பன் டைஆக்சைடு வெளியீடு சுமார் 24 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் காற்றின் தரம் மேம்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும்.
இந்த திட்டங்கள் மூலம் 22 லட்சத்திற்கும் அதிகமான மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும், உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய ஒருங்கிணைந்த லூப்ரிகண்ட் வளாகம் இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தியை மேலும் வலுப்படுத்தும்.
கிராமப்புற சாலை மேம்பாட்டு பணிகள் மூலம் கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு மேம்பட்டு, மக்கள் எளிதாக பயணம் செய்யும் வசதி ஏற்படும். பெண்கள் பாதுகாப்பாக நடமாடவும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கும், விவசாயிகள் குறைந்த செலவில் பொருட்களை கொண்டு செல்லவும் இது உதவும்.
தேசிய நெடுஞ்சாலை 81-ல் அமைக்கப்பட உள்ள பைபாஸ் சாலை போக்குவரத்து நெரிசலை குறைத்து பயணத்தை வேகமாகவும் வசதியாகவும் மாற்றும்.
மேலும் தொடங்கப்பட்டுள்ள ஐந்து புதிய ரெயில் சேவைகள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கும் பயண இணைப்பை மேம்படுத்தும்.




