என் தமிழ்

ஈரான் மற்றும் குவைத் உட்பட 14 நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது

வாஷிங்டன், 03 மார்ச் 2026 : அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததைத் தொடர்ந்து, அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து கடந்த 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அவரது மகள், மருமகன், பேரன் உள்ளிட்ட பலரும் பலியாகியதாக கூறப்படுகிறது.

டெஹ்ரான் மட்டுமின்றி, ஈரான் முழுவதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் பள்ளி மாணவிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தொடர் அலைகளாக செலுத்தி வருகிறது. மேலும், அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைத்து நீண்டதூர ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குவைத்தில் பணியில் இருந்த 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிலும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உலக அளவில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள இந்த மோதல் இன்று நான்காவது நாளாகவும் தீவிரமாக நீடித்து வருகிறது. இரு தரப்பும் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பயன்படுத்தி தாக்குதல்களை அதிகரித்துள்ளன. குறிப்பாக டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தூதரக விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மோரா நாம்தார் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில், “அமெரிக்கர்களுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய வணிகப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளியேறுவதற்கு உதவி தேவையெனில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் +1-202-501-4444 மற்றும் அமெரிக்கா அல்லது கனடாவில் இருப்பவர்கள் +1-888-407-4747 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அறிவிப்புகளைப் பெற http://step.state.gov தளத்தில் பதிவு செய்யவும்,” என தெரிவித்துள்ளார்.

Scroll to Top