புதுடெல்லி, 01 மார்ச் 2026 : அமெரிக்காவும் இஸ்ரேலும் நேற்று ஈரானை கடுமையாக தாக்கியதில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணம், மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியானதாக கூறப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி, அவரது மகள் மற்றும் மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு உறுதி செய்துள்ளது.
காமேனியின் மறைவுக்குப் பின்னர், பல்வேறு நாடுகளில் அவருக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலையால் இந்தியாவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல்–ஈரான் மோதலின் தாக்கமாக, மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் இன்று மொத்தம் 225 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் மும்பை விமான நிலையத்தில் 125 விமானங்களும், டெல்லி விமான நிலையத்தில் 100 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் 60 சர்வதேச விமானங்களின் புறப்பாடும், 40 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மும்பையில் 67 சர்வதேச விமானங்களின் புறப்பாடும், 58 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





