என் தமிழ்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

மதுரை, 01 மார்ச் 2026 : மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன், மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில் ரூ.4,400 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை–எழும்பூர் இடையிலான 4-வது ரெயில் வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்காடு போன்ற இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை சேவைகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன. மேலும், மரக்காணம்–புதுச்சேரி மற்றும் பரமக்குடி–ராமநாதபுரம் இடையிலான 4 வழிச்சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர் எ.வ. வேலு, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட 26 தரப்புகள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்றும் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top