என் தமிழ்

‘ஸ்வாகதம்’ மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையை கௌரவிக்கும் பாராட்டு விழா

கோலாலம்பூர் 27 பிப்ரவரி 2026 – இந்திய உயர்ஸ்தானிகரகம், கோலாலம்பூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாசார மையம் (NSCBICC) இணைந்து, “ஸ்வாகதம்” (Swagatham) என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாசார நிறுவனங்கள், அகாடமிகள் மற்றும் சமூக அமைப்புகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டும் சிறப்பு கௌரவ விழாவை 27 பிப்ரவரி 2026 அன்று நடத்துகிறது.

இந்த “ஸ்வாகதம்” நிகழ்ச்சி, 7–8 பிப்ரவரி 2026 அன்று மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட “Selamat Datang Modiji” என்ற சிறப்பு இந்திய சமூக நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. MINES சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில், இந்திய பிரதமர் மற்றும் மலேசிய பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் இணைந்து கலந்துகொண்டனர். இந்நிகழ்வு, இந்தியா–மலேசியா மக்களிடையேயான உறவுகளின் வலிமையையும் நட்பையும் கொண்டாடியது.

NSCBICC ஒருங்கிணைப்பில் நடைபெற்ற “ஸ்வாகதம்” நிகழ்ச்சியில், மலேசியா முழுவதும் உள்ள 46 நடனப் பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளிலிருந்து சுமார் 800 கலைஞர்கள் பங்கேற்றனர். இவ்விசேஷமான கலாசார நிகழ்வு, “பாரம்பரிய இந்திய நடனத்தில் அதிகமான கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வு” என்ற தலைப்பில் மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாசார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் 27 ஜனவரி 2026 அன்று நடைபெற்ற இந்திய தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்களித்தவர்களுக்கும் பாராட்டு வழங்கப்பட்டது .

நிகழ்வு விவரங்கள்:

தேதி: 27 பிப்ரவரி 2026 (வெள்ளிக்கிழமை)

நேரம்: மாலை 5.30 மணி

இடம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாசார மையம் (NSCBICC), கோலாலம்பூர்

முதன்மை விருந்தினர்: இந்திய உயர்ஸ்தானிகர் திரு. பி.என். ரெட்டி

Scroll to Top