மதுரை, 28 பிப்ரவரி 2026 : தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்ட பிரசார கூட்டங்கள் வருகிற 1-ஆம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற உள்ளன. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதற்காக இன்று (28-ஆம் தேதி) இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வருகிற பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் அவர், பின்னர் ஹெலிகாப்டரில் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின், சிறப்பு விமானத்தில் மதுரைக்கு புறப்படுகிறார்.
மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றன. தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள வான்வழி கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். மேலும், காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
பரமக்குடி–ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல மத்திய அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு கும்பமரியாதை வழங்கப்படுகிறது.
அதன்பின் மாலை 4.30 மணிக்கு மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். 120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் பிரதமர் பயணம் செய்யும் பகுதிகள் முழுவதும் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோருக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





