28 பிப்ரவரி 2026 : பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக சபை உறுப்பினர் (Exco), பயனீட்டாளர் சங்கம் பினாங்கு (CAP), பினாங்கு கிரீன் கவுன்சில், மலேசிய இந்து சங்கம் – பினாங்கு மாநில கவுன்சில் மற்றும் மாசி மகம் தெப்பத்திருவிழா – பினாங்கு நிர்வாகம் ஆகியவை இணைந்து செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டன.
வரும் 2 மார்ச் 2026 அன்று தெலுக் பஹாங், பினாங்கில் நடைபெறவுள்ள மாசி மகம் தெப்பத்திருவிழா கொண்டாட்டத்தின் போது, இந்து பக்தர்கள் எந்தவிதமான செயற்கை நுரை (Styrofoam / Polystyrene) பொருட்களையும் அல்லது பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு தெப்பத்திருவிழா சுற்றுச்சூழல் நட்பு விழாவாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில், அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக:
ஸ்டைரோஃபோம் தட்டுகள், குவளைகள், பைகளின் பயன்பாட்டை தவிர்க்கவும்
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம்
துணி பைகள், காகித பைகள், இலைத் தட்டுகள் போன்ற சுற்றுச்சூழல் நட்பு மாற்றுகளை பயன்படுத்தவும்
விழா நடைபெறும் கடற்கரை மற்றும் நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க ஒத்துழைக்கவும்
மாசி மகம் தெப்பத்திருவிழா என்பது பினாங்கில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் முக்கிய ஆன்மீக விழாவாகும். இந்த விழா நடைபெறும் தெலுக் பஹாங் கடற்கரை பகுதி சுற்றுலா மற்றும் இயற்கை வளம் கொண்ட இடமாக இருப்பதால், பிளாஸ்டிக் கழிவுகள் கடல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதையும், பக்தர்கள் தங்கள் ஆன்மீக கடமையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைத்து செயல்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.






