புதுடெல்லி, 19 பிப்ரவரி 2026 : டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் Narendra Modi இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப திறன் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவில் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுவது, உலக தெற்கு நாடுகளுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்களின் தொடக்கத்தை மட்டுமே நாம் தற்போது காண்கிறோம்.
ஏ.ஐ. ஒரு மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் மிக்க கருவி. அது சரியான திசையில் வழிநடத்தப்படாவிட்டால் சவால்களையும் உருவாக்கலாம். எனவே அதன் எல்லைகளை விரிவுபடுத்தியபோதும், கட்டுப்பாடுகள் மனித கைகளிலேயே இருக்க வேண்டும்.
இந்த மாநாட்டின் கருப்பொருள், இந்தியா ஏ.ஐ.-ஐ எவ்வாறு அணுகுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ‘அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி’ என்பதே எங்களின் நோக்கம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், செயற்கை நுண்ணறிவு மனித குலத்தின் திறனை பலமடங்கு உயர்த்தும். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
உலகளாவிய பொதுநலனுக்காக ஏ.ஐ.-ஐ உருவாக்க நாம் உறுதி ஏற்போம். டீப்-ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. டிஜிட்டல் உலகில் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். மக்கள் உண்மையான தகவல் மற்றும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட தகவல் ஆகியவற்றை தெளிவாக பிரித்தறியக் கூடிய சூழல் உருவாக வேண்டும்.
இணையம் தொடங்கிய காலத்தில் அது உருவாக்கும் வேலைவாய்ப்புகளை யாரும் கணிக்க முடியவில்லை. அதேபோல், ஏ.ஐ. துறையில் எதிர்காலத்தில் உருவாகும் புதிய தொழில்கள் குறித்து இப்போது முழுமையாக கற்பனை செய்ய முடியாது.
இந்தியா ஏ.ஐ.-ஐ அஞ்சுவதில்லை. அதில் வாய்ப்புகளையும் வளமான எதிர்காலத்தையும் காண்கிறது. சிலர் அதில் அபாயத்தைப் பார்க்கிறார்கள்; இந்தியா அதில் சாதனையையும் முன்னேற்றத்தையும் காண்கிறது.
எங்களிடம் திறமையான மனிதவளம், புதுமை ஆற்றல் மற்றும் தெளிவான கொள்கை உள்ளது. இந்த மாநாட்டில் மூன்று இந்திய நிறுவனங்கள் தங்களின் ஏ.ஐ. மாதிரிகள் மற்றும் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இது நமது இளைஞர்களின் திறனை வெளிப்படுத்துகிறது.
இந்தியா ஏ.ஐ. புரட்சியின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, அதனை வழிநடத்தும் நாடாகவும் திகழ்கிறது. மனிதர்கள் தரவுப் புள்ளிகளாகவோ மூலப்பொருளாகவோ மாறாமல் இருக்க, ஏ.ஐ.-ஐ ஜனநாயகப்படுத்துவது அவசியம்.
மனித வரலாற்றில் சில முக்கிய தருணங்கள் அடுத்த நூற்றாண்டுகளை வடிவமைத்துள்ளன. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் திருப்புமுனைகளில் ஒன்றாக திகழ்கிறது.
‘MANAV’ என்ற தொலைநோக்கு கருத்தை நான் முன்வைக்கிறேன். இதில் M – தார்மீக மற்றும் நெறிமுறை அமைப்புகள், A – பொறுப்புணர்வுள்ள நிர்வாகம், N – தேசிய இறையாண்மை, A – அணுகல் மற்றும் உள்ளடக்கம், V – செல்லுபடியாகும் சட்டபூர்வ தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தை இணைக்கும் முக்கிய தளமாக ‘MANAV’ அமையும்.”
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.





