லண்டன், 19 பிப்ரவரி 2026 : இங்கிலாந்து மன்னர் Charles III-ன் சகோதரரும், Prince Andrew என அறியப்படும் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன், விண்ட்சரில் உள்ள அவரது இல்லத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய Jeffrey Epstein தொடர்பான விவகாரத்தில் ஆண்ட்ரூவின் பெயரும் முன்பு வெளியானது. எனினும், அந்த குற்றச்சாட்டுகளில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
மறைந்த Queen Elizabeth II-யின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பதவியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இளவரசர் பட்டத்தையும் அவர் முன்பே துறந்திருந்தார். முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இங்கிலாந்து வரலாற்றில் இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று 66வது பிறந்தநாளை முன்னிட்டு இருந்த நிலையில், பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்ற எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த ஆண்ட்ரூவை அந்நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தது இங்கிலாந்து முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து Thames Valley Police அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்ட விதிமுறைகளின்படி இளவரசரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக தூதராக பணியாற்றிய காலத்தில் ரகசிய தகவல்களை எப்ஸ்டீனுக்கு கசியவிட்டதாகவும், மேலும் எப்ஸ்டீன் மூலம் பெண்கள் கடத்தப்பட்ட விவகாரங்களிலும் தொடர்பு இருந்ததாக வெளிவந்த ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.





