அமெரிக்கா, 19 பிப்ரவரி 2026 : அமெரிக்காவைச் சேர்ந்த Jeffrey Epstein கரீபியன் பகுதியில் உள்ள ஒரு தனித்தீவை வாங்கி, அங்கு சிறுமிகளை கடத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் Donald Trump, தொழிலதிபர் Bill Gates, முன்னாள் அமெரிக்க அதிபர் Bill Clinton, மற்றும் இங்கிலாந்து இளவரசர் Prince Andrew உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் எப்ஸ்டீனுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் தொடர்புகளின் மூலமாகவோ இணைந்திருந்ததாகவும், சிறுமிகள் மீதான வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் பெயர் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் சிறையில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு டிரம்ப் மற்றும் Elon Musk இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் போது, எப்ஸ்டீன் வழக்கில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக வெளிப்படையாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்குக்கான ஆவணங்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகள் எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டன. சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் வெளிவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் டிரம்பின் பெயர் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டிரம்ப் விளக்கமளிக்கையில், “என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என் அரசியல் முன்னேற்றத்திற்கு அவர் தடையாக இருந்தார். அவர் மோசமான நபர் என்பதை அறிந்தவுடன், 20 ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான நட்பை துண்டித்துவிட்டேன். மேலும், என் புளோரிடா கிளப்பிலிருந்தும் அவரை நீக்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.





