மும்பை,17 பிப்ரவரி 2026 : தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வந்தார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர், மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா–பிரான்ஸ் கூட்டமைப்பு கூட்டத்திலும் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.
மும்பை பயணத்தை முடித்துக்கொண்ட மேக்ரான், நாளை டெல்லி சென்று ஏஐ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.





