திருவண்ணாமலை, 16 பிப்ரவரி 2026 : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெற்றது. புராணக் கதைகளின்படி, திருமாலும் பிரம்மாவும் சிவபெருமானின் தொடக்கம் மற்றும் முடிவை காண இயலாமல் திகைத்தபோது, அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த தினமே மகா சிவராத்திரி எனக் கூறப்படுகிறது. இதை நினைவூட்டும் வகையில், கோவிலின் கருவறை பின்புறத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டிற்கான மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலைவே கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடினர்; மாலை நேரத்திற்கு பின் கூட்டம் மேலும் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்தனர். மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. ஐதீகப்படி, முதல் கால பூஜையை பிரம்மா, இரண்டாம் கால பூஜையை திருமால், மூன்றாம் கால பூஜையை உமையாள், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்கள் செய்ததாக நம்பப்படுகிறது.
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய, கட்டண மற்றும் கட்டணமில்லா வழிகளின் மூலம் ஒழுங்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவராத்திரியை முன்னிட்டு, கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகல் நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும், மாலை முதல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.





