அமராவதி, 11 பிப்ரவரி 2026 : ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ‘நெய்’ என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், உண்மையில் ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் பிற பொருட்கள் என்பதைக் கண்டறிந்ததாக அந்த குழு தெரிவித்தது.
இதனுடன் தொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உட்பட மொத்தம் 36 பேருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கின் ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் ஹவாலா பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





