கர்நாடகா, 13 ஆகஸ்ட் 2026 : மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்றும், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று (வியாழக்கிழமை) பந்த் நடைபெறுகிறது. காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவில் போதிய பருவமழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதாக கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில், தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பல கன்னட அமைப்புகள் மற்றும் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தற்போது பந்த்துக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன. தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பந்த்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்படுமா, பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, காவிரி நீர் விவகாரத்தில் அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், பந்த் நடத்த வேண்டாம் என்றும் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கன்னட அமைப்புகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.






