என் தமிழ்

திருப்பதி ஏழுமலையான் கோவில் : இலவச தரிசனத்துக்காக 20 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

திருமலை, 13 ஆகஸ்ட் 2026 : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ‘டைம் ஸ்லாட்’ டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 முதல் 20 மணி நேரம் வரை காத்திருப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் மட்டும் 78,956 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 31,014 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.

மேலும், சுமார் 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதுடன், 2 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 3,211 பக்தர்கள் மருத்துவச் சிகிச்சை மற்றும் மருத்துவ உதவியைப் பெற்றுள்ளனர். பக்தர்கள் அதிக அளவில் வந்ததால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பின. இதையடுத்து சிலாத்தோரணம் பகுதியில் உள்ள காத்திருப்பு அறைகள் மற்றும் வெளிப்புற வரிசைகளிலும் பக்தர்கள் காத்திருந்தனர்.

‘டைம் ஸ்லாட்’ டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் 18 முதல் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top