இம்பால், 10 பிப்ரவரி 2026 : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்தது. 2023-ம் ஆண்டு மே மாதத்தில் ‘குகி’ பழங்குடியினர் நடத்திய பேரணியைத் தாக்கிய சம்பவத்தால், குகி மற்றும் ‘மெய்தி’ இனத்தினருக்கு இடையே கடும் கலவரம் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட பதற்றநிலையால், கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பைரேன் சிங் தலைமையிலான அரசு பதவி விலகியது. அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபை முடக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த ஆட்சி மேலும் நீட்டிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சிக்காலம் கடந்த மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக கெம்சந்த் சிங் பதவியேற்றார். இவர் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர். அதேவேளை, குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜென் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இருப்பினும், இரு இனங்களுக்கிடையேயான ஆயுதக் குழுக்களின் மோதல்கள் அவ்வப்போது தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் தங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இன்று அதிகாலை லிட்டன் சாரைக்கோங் பகுதியில் மக்கள் வசிக்காத பல வீடுகள் தீவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உக்ருல் மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





