உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் ‘ஐ’ ரிலீஸ்

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் ‘ஐ’ ரிலீஸ்

Vikram-in-I

சொன்னால் நம்புவீர்களா என்பதே சந்தேகம்தான்…ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜப்பானிஸ், தைவானிஸ், மான்டரின் என பல மொழிகளில் வெளியிட உள்ளார்களாம். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒரு இந்தியத் திரைப்படம் உலகம் முழுவதும் அவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும். சுமார் 3 ஆண்டு காலமாக இப்படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார்.

படத்திற்காக விக்ரம் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் இளைத்தால் உயிருக்கே ஆபத்து என டாக்டர்கள் சொல்லுமளவிற்கு உடலை மிக ஒல்லியாக இளைக்க வைத்து நடித்திருக்கிறாராம் விக்ரம்.

தெலுங்கில் ‘மனோகரடு’ என்ற பெயரிலும் இப்படம் வெளியாக உள்ளது. ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களை விட இந்தப் படத்தில் இருக்கும் பிரம்மாண்டம் இதுவரை தமிழ்த் திரையுலகம் கண்டிருக்காத அளவிற்கு உள்ளதாம். ஒவ்வொரு பாடல் காட்சியையும் ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்களாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளதாம். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்று இதுவரை பல படங்கள் சொல்லப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், இந்தப் படம் உண்மையிலேயே ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்ற அளவில் இருக்குமாம். வரும் செப்டம்பர் 15ம் தேதியன்று படத்தின் இசையை ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான், அர்ணால்டை கொண்டு வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.

‘ஐ’ படம் வந்த பிறகு அனைவருமே ஆச்சரியத்தில் ‘ஐ’ என வாயைப் பிளப்பது நிச்சயம் என்கிறார்கள் படக்குழுவினர்.