கடந்த சில வாரங்களாகவே டாக் ஆப் த கோலிவுட் கத்தி பட சர்ச்சைதான். சமீபத்தில் மீடியாக்களில் அதிகம் அடிபட்டு வருவது ‘கத்தி’ படம் குறித்த செய்திகளே! கத்தி படத்தை தயாரித்து வரும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் வியாபாரத் தொடர்பு இருப்பதாகக்கூறி சில ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன.
இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவிலான போராட்டமாக உருவெடுத்ததன் காரணமாக, கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு விற்றுவிட லைகா புரொடக்ஷன்ஸ் முடிவு செய்துவிட்டதாக தகவல் அடிபட்டது.
அதைத் தொடர்ந்து, ‘கத்தி’ படம் பற்றிய முக்கிய அறிவிப்பும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் கத்தி என்ற வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர்களும் வெளிவரும் என தகவல்கள் வெளியாகின.
அதன்படி ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. ஆனால் எதிர்பார்த்தபடி ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லோகோ உடன் கூடிய போஸ்டர்கள் வெளிவரவில்லை. மாறாக, அதே ‘லைகா புரொடெக்ஷன்ஸ்’ லோகோவுடனே வெளிவந்துள்ளது.
இதன் மூலம் கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு விற்கவில்லை என்பதையும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லைகா அதை சமாளிக்கும் என்பதையும் மறைமுகமாக உணர்த்துவதுபோல் புதிய போஸ்டர்கள் உள்ளன.
இதற்கிடையில், நேற்று வெளியான கத்தி போஸ்டர்களைப் பார்த்த விஜய் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதிய ஸ்டில்லுடன் புது மாதிரியான டிசைனில் போஸ்டர்கள் வரும் எனவும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஏற்கெனவே வெளிவந்த பழைய ஸ்டில்லுடன் போஸ்டர்கள் வந்ததே ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு காரணம்.