என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் 47வது தேசிய அபிராமி அந்தாதி ஓதும் விழா 2025 பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது

கோலாலம்பூர், 27 நவம்பர் 2025 : மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநிலத் தலைமையில் ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் 23 நவம்பர் 2025 அன்று காலை 8.00 மணி அளவில் கொடி ஏற்றத்துடன் துவங்கி 47வது தேசிய அபிராமி அந்தாதி ஓதும் விழா 2025 மிகவும்  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அபிராமி அம்பாள் மற்றும் அபிராமி பட்டர் ஆகியோரின் பூர்ண அலங்காரத்துடன் கூடிய சிறப்புப் பூஜையும் நடத்தப்பட்டது. அபிராமி அந்தாதி போன்ற நிகழ்வுகளை இன்னும் பல மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் நம் இந்திய சமுதாயத்தினரிடையே சமய அறிவை வளர்த்துக் கொள்ள இதுபோன்ற நிகழ்வுகள் பெரிதும் உறுதுணையாக அமையும் என்றும் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி தங்க கணேசன் தங்கவேலு தமது சிறப்புரையில் வலியுறுத்தினார். அபிராமி அந்தாதி பாடல் வரிகளில் உள்ள சில முக்கிய பாடல்களை எடுத்து விரிவாக்கம் செய்து மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் நிறைய பயன்பாடு கிடைக்கும் என்று சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர் மணி அசோகன் மூக்கன் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தனது சார்பில் ஏற்பாட்டுக் குழுவினரிடம் 10ஆயிரம் ரிங்கிட் நன்கொடையை வழங்கினார். அபிராமி அந்தாதி திருவிழாவின் முக்கியப் பயன்பாடுகளில் ஒன்று சமய அறிவை நாடுதழுவிய அளவில் உள்ள மாணவர்கள் மத்தியில் வளர்க்கும், சமய ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் சமய நெறி பண்பாடு உள்ள இளம் சமுதாயமாக உருவாக்கும் முயற்சியில் இத்தகைய நிகழ்வானது இன்றியமையாதது. மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழித் திறனை மேலோங்கச் செய்யவும், அபிராமி அந்தாதி பதிகங்களைப் பிழையின்றி உச்சரிக்கவும், ஒரே மேடையில் மாணவர்களிடையே ஒற்றுமை மேலோங்கும் வகையில் மாபெரும் முயற்சியாக இது கருதப்படுகிறது என்று மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலக் கல்வி மற்றும் தொழில்நுட்ப பிரிவு சந்துரு ஜி கூறினார்.

Scroll to Top