சிரியாவில் அதிபர் பஷர்அல்– ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை உருவானது. போராட்டத்தை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிபர் ஆசாத்தின் ராணுவத்துடன் புரட்சி படை போரிட்டு வருகிறது. இதனால் அங்கு கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
பதவி விலக அதிபர் ஆசாத் மறுத்து விட்டார். அதனால் அங்கு இன்னும் போர் நடக்கிறது. புரட்சி படையின் பிடியில் பல நகரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அங்கு எழுச்சி பெற்றுள்ள ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகளும் ஒரு பகுதியை கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இதுவரை கடந்த சண்டையில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 369 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்த தகவலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார்.
சராசரியாக மாதந்தோறும் 6 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாவும் அவர் கூறினார்.