கரூர்[தமிழ்நாடு, இந்தியா], 27 செப்டம்பர் 2025 : த வெ க தலைவர் நடிகர் விஜய் தனது பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று 27 செப்டம்பர் 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி முதலில் நாமக்கல்லில் பரப்புரையை முடித்த விஜய் பின்னர் கரூரில் தனது பரப்புரையை தொடர்ந்தார். அப்போது விஜய்யை பார்க்கவும் அவரின் உரையை கேட்கவும் அவரது தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கூடியிருந்தனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்ததாக முதலில் செய்திகள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் குழந்தைகள் உட்பட சுமார் 31 பேர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக மிகவும் அதிர்ச்சி தரும் சோகமான செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
நிலைமையை சீர் செய்து வேண்டிய உதவிகளை செய்ய அமைச்சர்களை கரூர் விரைந்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் விரைந்து சென்று தேவையான உதவிகளை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். மற்ற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு வரும்படி உத்தரவிட்டிருப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கரூர் விரைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கரூர் வர இருக்கிறார் என்கிற தகவலும் தெரிவிக்கிறது.





