என் தமிழ்

மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர், அருந்தமிழர் செந்தமிழ்ச் செம்மல் சி. தென்னரசு காலமானார்

காஜாங், 09 ஜூலை 2025 : மலேசிய தமிழ் எழுத்துலகின் அரிய ஒளிக்கதிராக விளங்கிய மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர் மற்றும் அருந்தமிழ்ச் செம்மல் திரு. சி. தென்னரசு @ தென்றல் தென்னரசு அவர்கள், நேற்று ஜூலை 8, 2025 அன்று பிற்பகல் 12.35 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது மறைவு, மலேசியத் தமிழ்ப் பணியில் ஈடுபட்ட இலக்கியவாதிகள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரிடமும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


அவரது முதல் படைப்பு 1986ஆம் ஆண்டு “வானம்பாடி ஜூனியர்” பக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தென்றல் வார இதழ் மற்றும் வானம்பாடி ஆகிய வெளிகளிலும், அவர் எழுதிய நூற்றுக்கணக்கான படைப்புகள், நேர்காணல்கள் மற்றும் இலக்கியச் சிந்தனைகள், தமிழ் வாசகர்கள் மனதில் நிலைத்து நின்றன.


தமிழைப் பரப்பும் பணியில் அவர் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்று, தென்றல் வார இதழின் கெடா முதல் ஜோகூர் வரை நடைபெற்ற “தென்றல் தொடர்பயணம்” நிகழ்ச்சி. இது வழியாக தமிழைப் பேணும் எண்ணத்துடன், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் வாசகர்களை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்தின் புரட்சி ஏற்படுத்தினார்.


அவரது இறுதி சடங்கு ஜூலை 10, 2025 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, No. 9, Jalan Sri Bangi 2, Taman Sri Bangi 2, 43000 Kajang, Selangor D.E என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
தென்றலாய் வந்தவர், தமிழின் வாசலில் தீபமாய் எரிந்தவர். இப்போது ஓர் ஒளியாய்த் தேய்ந்தாலும், அவரது வார்த்தைகளில் காலம் முழுவதும் தமிழின் ஓசை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

“தமிழுக்காக வாழ்ந்தவர், தமிழில் என்றும் வாழ்வார்”

Scroll to Top