கிருஷ்ண ஜெயந்தி விழா தென்மேற்கு லண்டன் நகரின் வாட்போர்டு பகுதியில் உள்ள பக்திவேதானந்தா மாளிகையில் உள்ள ஹரே கிருஷ்ணா கோவிலில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 70 ஆயிரம் பேர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
விழா நடந்த பகுதி பிருந்தாவன தோட்டம் போல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், விழாவிற்கு வருபவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டும் 16 முதல் 94 வயதுடைய 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்தியாவுக்கு வெளியே நடந்த மிகப்பெரிய கிருஷ்ண ஜெயந்தி விழாவாகவும் இது அமைந்திருந்தது.
விழாவையொட்டி நடனம், இன்னிசை, நாடகம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முகத்தில் ஓவியங்கள் தீட்டுதல், பக்தி புத்தகங்கள், இயற்கை வேளாண் பொருட்கள், ஆபரணங்கள், இசைக்கருவிகள், சி.டி.கள் விற்பனைக்காக தனித்தனி அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கோவில் தலைவர் ஸ்ருதிதர்ம தாசா தெரிவித்தார்.
லண்டனில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் 70 ஆயிரம் பேர் பங்கேற்பு
